*மனித நேயம் உயிர்த்தெழுந்த நாள்:*
~~~~~~~~~~~~~~~~~
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எளிய மக்களுக்காக ஆளும் வர்க்கத்தை எதிர்த்து உரத்துக் குரலெழுப்பியவர் ஏசுபெருமான். அவரை அக்காலத்தில் ஆண்டவரின் அவதாரமாக மக்கள் நம்பியதால் ஆத்திரம் கொண்ட ஆட்சியாளர்கள் அவரை சிலுவையில் அறைந்தனர். அந்த கொடூரத் தண்டனையையும் ஏசுபெருமான் மக்களுக்காக ஏற்று மரித்த நாள் தான் இன்றும் கிறித்தவப் பெருங்குடி மக்களால் புனித வெள்ளியாக நினைவுகூரப்படுகிறது. அத்தகையப் புனித வெள்ளியன்று மரித்துப் போன ஏசுபெருமான் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்னும் நம்பிகையை இன்றும் கிறித்தவ மக்கள் கொண்டாடும் நாள் தான் ஈஸ்டர் தினமாகும்.
ஏசுவைக் கொன்றுவிட்டோம் என்று அன்றைய மதவெறி ஆட்சியாளர்கள் கொக்கரித்துக் கொண்டிருந்த சூழலில், மீண்டும் ஏசு உயிர்த்தெழுந்தார் என்பது அவர்களுக்குப் பேரிடியாய் அதிர்ச்சியளித்தது. அதனைக் கட்டுக்கதை என்று கூறி அவர்கள் ஏற்க மறுத்தனர். ஆனால், ஏசுவின் போதனைகள் ஊழித்தீயாய் உலகெங்கும் பரவி மனிதநேயத்தை செழிக்க வைத்தது. கோடிக்கணக்கான மக்கள் அவரின் போதனைகளை ஏற்று கிறிஸ்தவர்களாக மாறி ஏழை எளியோருக்காக இன்றும் ஊழியம் செய்து வருகின்றனர். அவருடைய போதனைகள் யாவும் புனித வேத நூலாக ஏற்கப்பட்டுள்ளது. அவர் சராசரி மனிதராக இருந்திருந்தால் அவரது சிந்தனைகளும் மரித்துப் போயிருக்கும். ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மானுடத்தை வழிநடத்தும் பேராற்றலாக அவரின் போதனைகள் பரிணமித்துள்ளன. இதுவே அவரின் உயிர்தெழுதலுக்குச் சாட்சியமாக உள்ளது. அவர் மீண்டும் மனித உருவில் உயிர்தெழுந்தாரோ இல்லையோ கருத்துருவில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு உலக அளவில் இயங்கிக் கொண்டிருக்கிற புனித வேத நூலான பைபிளும் கிறிஸ்தவ மிஷினரிகள் ஆற்றும் தூயத் தொண்டுகளும் சான்றுகளாக உள்ளன.
இதை அங்கீகரிக்க மனமில்லாத பிற்போக்குவாதிகள் சிலர் இங்கே பைபிளை கொளுத்துவதும் அப்பாவி கிறிஸ்தவர்களைத் தாக்குவதும் போன்ற அற்பச் செயல்களில் ஈடுபட்டு வருவது வேதனையளிக்கிறது .கிறிஸ்தவத்தை இன்னொரு போட்டி மதமாக பார்க்காமல் மனித நேயத்தைப் போதிக்கும் வாழ்வியல் நெறியாக பார்த்தால் இத்தகைய அநாகரிகங்கள் அரங்கேற வாய்ப்பில்லை. அன்று ஏசுவை சிலுவையில் அறைந்த பழமைவாத சக்திகளின் மிச்சங்கள் இன்னும் இருக்கிறார்கள்; இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்பதற்கு மதுரை கூடல் நகரில் நடந்த வன்முறைகளே சான்றுகளாக உள்ளன.
மனித நேயத்திற்காக மரித்த ஏசுவின் வழியில் *எளிய மக்களுக்கு எதிரான பிற்போக்குவாதிகளை எதிர்த்து கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி மனிதநேயத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் தொடர்ந்து போராட வேண்டும் என்பதே ஈஸ்டர் என்னும் உயிர்த்தெழுதல் நாளில் நாம் உறுதியேற்க கடமைப்பட்டிருக்கிறோம். ‘ஏசு உயிர்த்தெழுந்தார்’ என்பது, இங்கே ‘மனிதநேயம் உயிர்த்தெழுந்தது’ என்பதையே உணர்த்துகிறது.*
இத்தகைய புரிதலோடு மனிதநேயத்திற்காக தொண்டாற்றும் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment