Sunday, January 6, 2019

*சேர்க்கையால் தான் நம் வாழ்க்கை!!*

''உரித்த வாழைப்பழம் வாயில் வந்து விழுமா என்ன? முயன்றால் தான் எதுவும் முடியும்'' சோம்பி இருக்கிறவர்களை பார்த்து பலர் சொல்லும் வார்த்தை இது.
ஆனால், கடவுள் நம் எல்லோருக்கும் உரித்த பழத்தை வாயில் ஊட்டி விடுகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஐந்தறிவு உயிர்களாக பிறக்காமல், படைப்பிலே உயர்ந்த படைப்பாக கருதப்படும் மனிதனாக அல்லவா நாம் இருக்கிறோம்.
ஆடாகவோ, மாடாகவோ, பூச்சியாகவோ, புழுவாகவோ பிறக்காமல் உயர்திணை இருப்பது வரப்பிரசாதம் அல்லவா?
முயற்சி செய்யாமல் கையில் வந்து விழுந்த இந்த 'மானுட வாழ்வு' என்னும் கற்பகக்கனியை ரசித்து உண்ண வேண்டும் என்பதே ஞானியர் நமக்கு தரும் உபதேசம்.

'அரிது! அரிது! மானிடர் ஆதல் அரிது' என்கிறாள் அவ்வை பாட்டி
'கனி தந்தால் கனி உண்ணவும் வல்லீரோ' என்கிறார் மாணிக்கவாசகர்.
மனித பிறப்பின் உச்சியை நாம் அடைவது எப்படி?
அதற்கான முதற்படியாக அமைவது எது தெரியுமா?
அது தான் 'நல்லவர் நட்பு'
ஆம்.... சேர்க்கையால் தான் நம் வாழ்க்கை உருவாகிறது.

சென்னை கந்தகோட்டம் முருகனை வழிபட்டு அருள் பெற்றவர் ராமலிங்க சுவாமிகள். 'வள்ளலார்' என அன்பர்கள் போற்றும் அவர், தன் ஒன்பது வயதில் உன்னத கவிமழை கொட்டினார்.
வேலவனிடம், என் வேண்டுதல்களை நிறைவேற்றுக என விண்ணப்பித்து வேண்டும், வேண்டும் என்றபடி பதினொரு கோரிக்கை பட்டியலை சமர்ப்பித்தார்.

உலக வாழ்வில் இன்பம் பெற பொன் வேண்டும், பொருள் வேண்டும், போகம் வேண்டும் என நாம் கேட்பதையா ஞானி கேட்பார்?
முருகனிடம் அவர் கேட்ட 'முதல் வேண்டும்' எது தெரியுமா?
'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்'.

அடுத்தது என்ன தெரியுமா?
'உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.'
தீயவர்கள் இருக்கும் திசைப்பக்கம் கூட நான் திரும்ப கூடாது.

நல்லவர் நட்பு ஒருவரின் வாழ்வை வளர்பிறை போல் செழிக்கச் செய்து பவுர்ணமியாக ஒளிர வைக்கும். தீயவர் தொடர்பு தேய்பிறையாகி அமாவாசை
போல் இருள் சூழ வைக்கும்.

'உன் நண்பன் யார் எனச் சொல்! நீ யார் என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்!' என்ற ஆங்கிலப் பொன்மொழி அனைவருக்கும் தெரிந்திருக்குமே!
நாளைய தலைமுறையினருக்கு, இளம் வயதிலேயே நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்தால் ஏற்றம் மிக்க வருங்கால சந்ததி உருவாகும்.
இளைய தலைமுறையினருக்கு நல்லவர் நட்பு கிடைக்க, துணைநிற்க வேண்டியது பெற்றோர், ஆசிரியர்களின் கடமை.

''எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே அவர்
நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்
அன்னை வளர்ப்பினிலே!''
என்று திரைபடப்பாடல் ஒன்று தெரிவிக்கின்றதே!

அருணகிரிநாதர் வயலூர் முருகப்பெருமானை வழிபடச் சென்ற பொழுது அங்கிருந்த கிளிகள் 'முருகா! முருகா' என்று ஒலி எழுப்பியதாக திருப்புகழில் பாடியுள்ளார்.
சேக்கிழார் பெரிய புராணத்தில், கிளிகள் சிவனின் திருநாமத்தை இனிமையாக பாடியதாக கூறியுள்ளார்.
'சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை' என்பதை நாம் அறிவோம்.
பக்திமான்களின் தொடர்பால், கோயிலில் கிளி கடவுள் திருநாமத்தை சொல்லியது. ஆனால், தற்காலத்தில் கிளி பேச்சைக் கேட்டால் நமக்கு 'கிலி' பிறந்து விடுகிறதே...!

உத்தமர்களின் உறவால் எதிர்கால வாழ்வு அர்த்தமுள்ளதாக்குகிறது.
வேடர் குலத்தைச் சேர்ந்தவன் குகன்.
வானர வீரர்களில் ஒருவன் சுக்ரீவன்
அரக்கர்களில் தோன்றியவன் விபீஷணன்.
ராமாயணத்தில் இடம்பெறும்
இந்த மூவரும் அவதார புருஷன் ராமர்
மீது அன்பு கொண்டனர். அவர்களை
சகோதரர்களாக ஏற்றார் ஸ்ரீராமர்.
'ஒரு வில் ஒரு சொல் ஒரு இல்' என உயர்ந்த பண்புடன் வாழ்ந்த சரித்திர நாயகர் ராமபிரானோடு நட்பு கொண்டதால் மேலான நிலை பெற்றனர். குகப் பெருமான், சுக்ரீவ மகாராஜா, விபீஷண ஆழ்வார் என மூவரும் சிறப்படைய அடிப்படையாக அமைந்தது ராமனுடன் கொண்ட உன்னத நட்பு தானே!

'கற்பகத் தருவைச் சேர்ந்த காகமும் அமுதம் உண்ணும்!' என்ற பழம்பாடல் ஒன்றுண்டு.
மோகன்தாஸ் என்றிருந்து மகாத்மாவாக மலர்ந்த காந்திஜி, சிறுவயதில் அரிச்சந்திரன் நாடகத்தில் உள்ளம் பறி கொடுத்ததால் தானே சத்திய சோதனை நாயகராக சாதித்து காட்டினார்.
பயனுள்ள பொழுதுபோக்கு, சாதனையாளர் வாழ்க்கை வரலாறு படித்தல், ஞானிகளின் பொன் மொழிகளை நினைவு கூர்தல், நல்லவருடன் பழகுதல், ஆக்க சிந்தனைகளை மனதில் அசை போடுதல் ஆகிய அனைத்தும் நல்லவர் சேர்க்கைக்கு நிகரான நடைமுறைகளே.
'அறியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்'
என்று நல்லவர் நட்பின் மூலம் எதிர்கால வெற்றிக்கு வழி காட்டுகிறார் திருவள்ளுவர்.

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...