Friday, October 19, 2018

*அதிகார பத்திரம்!(Power of attorney act) *

ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி அளிப்பதும் செயலாற்றுவதும் கடவுளுக்கு வேண்டுமானால் சாத்தியமானதாக நாம் அறிந்திருக்கலாம். ஒவ்வொரு  மனிதனும் தன் பணியை தானே செய்தாக வேண்டும் என்ற நிலையில், இருவேறு இடங்களில் அவனின் தேவை இருப்பின் என்ன செய்வது? சட்டத்தின் கீழ்  அந்த நிலைக்கு ஒரு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

பொதுவாக ஒரு நபரின் சொந்தச் செயலுக்காகவோ, தொழில் ரீதியாகவோ, அவரின் தேவை இருப்பின், அந்தச் செயலை ஏதோ ஒரு காரணத்தால் நேரடியாக  நிறைவேற்ற முடியாத நிலையில், தனக்காக ஒருவரை நியமித்து, அந்தப் பணியினை நிறைவு செய்ய,சட்டப்படி அதிகாரப் பத்திரம் மூலம் ஒருவரை நியமித்து  அந்தப் பணியினை நிறைவேற்றிக் கொள்ளலாம்.   

இதையே பொதுவாக பலரும் ‘பவர்’ என்று கூறுவார்கள். இந்த வார்த்தையை பலர் தங்களுடைய அன்றாட வாழ்வில் உபயோகிப்பதை கேட்கக்கூடிய வாய்ப்புகள்  அதிகம். பெரும்பாலான நேரங்களில் சட்டத்தின் முன் அதற்கான விளக்கம், செயல்பாடு என்ன என்று முழுமையாக அறியாமல் செயலாற்றி பல சட்டச்  சிக்கல்களில் மாட்டிக்கொள்வதைப் பார்த்திருக்கிறோம். 

ஒருவர் தன்னுடைய பணியை, தன்னுடைய நிலையில் வேறொருவர் இருந்து அந்தப் பணியினை செய்து கொடுக்கத் தயாரிக்கப்படும் அதிகாரப்
பத்திரமே ‘பவர் ஆப் அட்டர்னி’ என்று கூறப்படுகிறது. இந்த அதிகாரப் பத்திரம் பொது அதிகாரப் பத்திரம் (General Power of Attorney), சிறப்பு அதிகாரப் பத்திரம்  (Special Power of Attorney) என இருவகைப்படும்.

பொது அதிகாரப் பத்திரம் என்பது அதிகாரம் கொடுத்தவரின் அனைத்துச் செயல்களையும் அதிகாரம் பெறுபவர் செயலாற்றும் வகையில் இருப்பது. உதாரணமாக...  வயோதிகம் காரணமாக தன்னுடைய செயலை ஆற்ற இயலாமல் இருப்பவர்களால் இயற்றப்படும் அதிகாரப் பத்திரம். அதுபோல, நிறுவனங்களில் தொழில்  ரீதியாக   Sleeping Partner   என்று சொல்லக்கூடிய செயல்படா பங்குதாரர் கொடுக்கக்கூடிய அதிகாரப் பத்திரத்தையும் குறிப்பிடலாம்.

சிறப்பு அதிகாரப் பத்திரம் என்பது அந்தப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் செயல்களை மட்டுமே செயலாற்றக்கூடிய அதிகாரம்.  உதாரணமாக... தன் சார்பாக  நீதிமன்றத்தில் ஆஜராக இன்னொருவரை நியமிப்பது. 

பொதுவாக ஒரு தனிநபரோ, நிறுவனமோ அவர்களின் நிலையில் இருந்து செயலாற்ற இன்னொரு வருக்கு அளிக்கும் அதிகாரம் என்பதுதான் இந்த பவர் ஆப்  அட்டர்னி. அன்றாட நடைமுறையில் சொத்து வாங்குவது, விற்பது போன்ற பரிவர்த்தனைகளில் இந்த அதிகாரப் பத்திரத்தின் செயல்பாட்டை நாம் அதிக அளவில்  காணும் வாய்ப்பிருக்கிறது. அதிலும் ழிஸிமி என்று சொல்லக்கூடிய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், மூத்த குடிமக்கள், பெண்கள் ஆகியோரே தங்களின் பணியை  செய்ய வேறொருவரை நியமிப்பதை அதிகமாகக் காண முடிகிறது. 

‘நம்பினார் கெடுவதில்லை’ என்பது நான்மறை தீர்ப்பு. இந்த உலகம் இயங்குவதே நம்பிக்கையின் அடிப்படையில்தான். தன் மீது வைக்கும் நம்பிக்கையை விடவும்,  மற்றவர் மீது வைக்கும் நம்பிக்கை போற்றுதலுக்குரிய ஒரு செயல். ஒருவேளை நம்பிக்கைக்கு உரியவர் அந்த நம்பிக்கையை தகர்க்கும்போது ஏற்படும் ஏமாற்றம்,  இழப்பு சில நேரங்களில் ஈடு செய்ய முடியாததாக இருக்கும். அது ஏற்படுத்தும் பாதிப்பும் அதிகம்.

இந்த அதிகாரப் பத்திரமே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படும் ஒன்றுதான். இது இருமுனை கூர் கத்தி போன்றது. அதிகாரப் பத்திரம், கொடுப்பவருக்கும்  பெறுபவருக்கும் இடையே உருவாகும் நல்ல இணக்கத்தால் ஏற்படும் ஒரு செயல். சில நேரங்களில் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை தவறான எண்ணத்துடன்  பயன்படுத்த எண்ணினால், அந்த அதிகாரத்தை கொடுத்தவருக்கு ஏற்படும் பாதிப்பு பெரும் அளவில் இருக்கும். ஒருவருக்கு அதிகாரப் பத்திரத்தின் மூலம்  கொடுக்கப்பட்ட அதிகாரம் அந்தப் பத்திரம் அமலில் உள்ள வரை மட்டுமே செல்லும்.  ஒருவேளை அந்தப் பத்திரத்தை அவர் அறியாமல், கொடுத்தவர் ரத்து  செய்யும் பட்சத்தில், அதிகாரம் பெற்றவருக்கும் சட்டச் சிக்கல்களும் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பொதுவாக எழுத்து மூலமாக கொடுக்கப்பட்ட  அதிகாரப் பத்திரத்தை வாய்மொழியாக ரத்து செய்வது சட்டத்தின் முன் ஏற்புடையதல்ல. அதோடு, அதிகாரம் கொடுத்தவர் அந்த அதிகாரப் பத்திரத்தை ரத்து  செய்வதை அதிகாரம் பெற்றவர் தடுக்க இயலாது. 

ஓர் அதிகாரப் பத்திரத்தின் மூலம் அதிகாரம் பெறுபவர் செய்யும் அனைத்துச் செயல்களுக்கும் அதிகாரம் கொடுத்தவரே பொறுப்பேற்க வேண்டும். கொடுக்கப்பட்ட  அதிகாரப் பத்திரம் நிலுவையில் உள்ள வரை அவரின் செயல்பாடுகள் சட்டத்துக்குட்பட்ட செயல்களாகவே நோக்கப்படும். ஒருவேளை அதிகாரம் பெறுபவர் அந்தப்  பத்திரத்தில் கொடுக்கப்பட்ட அதிகார வரம்பை மீறும் போது, தான் கொடுத்த அதிகாரத்தை தவிர, மற்ற செயல்களுக்கு அதிகாரம் கொடுத்தவர் பொறுப்பாளராக  மாட்டார். அதிகாரம் பெறுபவர் செய்யும் தவறுகளுக்கு சட்டப்படி பாதிக்கப்பட்ட யாரேனும் நடவடிக்கை எடுக்க இயலும். 

இந்த அதிகாரப் பத்திரம் Power of Attorney Act  1882ன் கீழ் செயல்படுகிறது. இப்போது எந்த வகை அதிகாரப் பத்திரமாக இருப்பினும் பதிவு செய்வது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்பத்திரத்தில் அதிகாரம் கொடுப்பவரும் அதிகாரம் பெறுபவரும் கையொப்பமிட வேண்டும். இரண்டு சாட்சிகளின் முன்னிலையில்  இந்தப் பத்திரம் இயற்றப்படும். இந்த நால்வரின் தங்கும் முகவரிக்கான சான்று சமர்ப்பிக்க வேண்டியதும் அவசியம். இவர்களின் புகைப்படமும் அந்தப் பத்திரத்தில்  இடம் பெற வேண்டும். அதிகாரப் பத்திரத்தை சொத்து பரிவர்த்தனைகளில் பயன்படுத்தும்போது   Life Certificate   என்று கூறப்படுகிற வாழ்நாள் சான்றிதழை  பத்திரப் பதிவாளர் முன் சமர்ப்பிக்க வேண்டியது சட்டப்படி அவசியம். இந்தப் பத்திரம் பற்றிய தகவல்கள் வில்லங்க சான்றிதழ்களிலும் இடம் பெறுதல் வேண்டும்.   அதிகாரப் பத்திரத்தின் மூலம் அதிகாரப் பெறுபவருக்கும் கொடுப்பவருக்கும் இடையே எந்தவித பண பறிமாற்றமும் இருக்கக் கூடாது. 

பொதுவாக அதிகாரப் பத்திரம் கொடுப்பவருக்கு மரணம் சம்பவிக்கும்போது அல்லது அதனைப் பெற்றவருக்கு மரணம் சம்பவிக்கும் போது, அது தானே அதன்  செயல்பாட்டினை சட்டப்படி இழக்கிறது. அதே போல ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கூட்டாக அதிகாரம் கொடுக்கும் போதோ,  ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கூட்டாக அதிகாரம் பெறும்போதோ, அதில் யாரேனும் ஒருவருக்கு மரணம் ஏற்படுமென்றாலும் அந்தப் பத்திரம் அதன்  செயல்பாட்டினை சட்டப்படி இழக்கிறது.  இவ்வளவு சட்டப் பாதுகாப்பு இருந்தும், பல வேளைகளில் அதிகாரப் பத்திரத்தின் மூலம் ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்கள்  நீதிமன்றக் கதவுகளை தட்டக்கூடிய நிலை இருப்பதை மறுப்பதற்கில்லை. 

நம் நாட்டில் நிலவும் ஆணாதிக்கச் சிந்தனையினாலும், பெண்கள் சிலர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின்மையினாலும் அவர்களுக்கான செயல்களை  ஆற்ற இன்னொருவருக்கு அதிகாரம் கொடுக்கும் நிலை பல இடங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது. நம்மால் முடியும் என்ற எண்ணம் அனைவரிடமும்  இருப்பது அவசியம். பெண்கள் அவசியமில்லாமல் மற்றவருக்கு அதிகாரம் கொடுக்கும் செயல்களைத் தவிர்ப்பது பெண்ணினத்துக்கே நலம் பயக்கும். 
பொதுவாக சட்டத்தின் முன், தேவையிருக்கும் பட்சத்தில் மட்டும் இந்த அதிகாரப் பத்திரத்தை இயற்றுவது சிறப்பு. எவ்வாறு இருந்தாலும் ஒரு நபர் விழிப்புடன்  இருப்பது மிகவும் அவசியம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்தானே?  விழித்திருப்போர் வீழ்த்தப்படுவதில்லை!

ஓர் அதிகாரப் பத்திரத்தின் மூலம் அதிகாரம் பெறுபவர் செய்யும் அனைத்துச் செயல்களுக்கும் அதிகாரம் கொடுத்தவரே பொறுப்பேற்க வேண்டும்.


எழுத்து வடிவம்: சாஹா

பவர்’ மூலம் சொத்து வாங்கும்போது
‘பவர்’ அதிகாரம்
உறுதிபடுத்த வேண்டும்
உரிமையாளரை நாட வேண்டும்
கவனமாக செயல்பட வேண்டும்
சொத்து பரிவர்த்தனையில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் வரிசையில் ‘பவர் ஆப் அட்டர்னி’க்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஒருவர் தனது சொத்தை விற்பனை செய்வதற்கு தனது சார்பில் ஒருவரை நியமித்து அவருக்கு அதிகாரம் வழங்குவது ‘பவர் ஆப் அட்டர்னி’ எனப்படுகிறது. இந்த ‘பவர்’ கொடுக்கும் அதிகாரத்திலும் சில வரைமுறைகள் இருக்கின்றன. அதிலும் சொத்தை விற்பனை செய்வதற்கு மட்டுமே ‘பவர்’ எழுதிக்கொடுக்கப்படுவதில்லை.

‘பவர்’ அதிகாரம்
சொத்தை வாங்குவதற்கும், சொத்தை நிர்வகிப்பதற்கும் ‘பவர்’ அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். முக்கியமாக சொத்தை விற்பதற்கு முந்தைய பரிவர்த்தனை நிலையான  விற்பனை ஒப்பந்தம் போடுவதற்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டிருக்கலாம். அப்படி இருந்தால் அவரிடம் இருந்து சொத்தை வாங்குவதற்கு முன்பு உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில் விற்பனை ஒப்பந்தம் போடுவதற்கு மட்டுமே அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பவருக்கு நேரடியாக சொத்தை விற்பனை செய்ய உரிமை கிடையாது.

அவரால் சொத்தை விற்பனை செய்வது குறித்து ஒப்பந்தம் மட்டுமே போட்டுக்கொடுக்க முடியும். சொத்தை பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக விற்பனை ஆவணம் எழுதித்தர முடியாது. அதை மீறி அவர் உண்மைகளை மறைத்து விற்பனை ஆவணம் எழுதித் தந்தாலும் அது செல்லாது. ஆகையால் சொத்தை விற்பனை செய்பவர் ‘பவர்’ வைத்திருந்தால் அந்த சொத்தை வாங்குவதற்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது.

உறுதிபடுத்த வேண்டும்
அவர் வைத்திருக்கும் ‘பவர்’ எந்த வகையை சார்ந்தது? முக்கியமாக சொத்தை விற்பனை செய்வதற்கான தகுதி படைத்ததா? என்பதை உறுதி படுத்திக்கொள்வது அவசியம். அதைவிட முக்கியமான விஷயம் மற்றொன்று இருக்கிறது. அந்த பவர் செல்லத்தக்கதாக இருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் கையில் இருக்கும் ‘பவர்’ ரத்து செய்யப்பட்டதாக இருக்கலாம்.

அவருக்கு ‘பவர்’ எழுதிக்கொடுத்த சொத்தின் உரிமையாளருக்கும், அவருக்கும் இடையே ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கலாம். அதன் காரணமாக சொத்தின் உரிமையாளர் ‘பவரை’ ரத்து செய்து இருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் இருந்தால் ‘பவர்’  வைத்திருப்பவரால் எதுவும் செய்ய முடியாது. அவர் தன்னிடம் இருக்கும் ‘பவர்’ அதிகாரம் ரத்து செய்யப்பட்ட விஷயத்தை மறைத்து சொத்தை விற்பனை செய்ய முயற்சிக்கலாம். எனவே உஷாராக இருக்க வேண்டும்.

உரிமையாளரை நாட வேண்டும்
அப்படி விற்பனை செய்தால் அந்த சொத்தை வாங்கியவர்தான் பாதிக்கப்பட நேரிடும். அந்த சொத்து விற்பனை  செல்லாது. ஆகவே சொத்தை விற்பனை செய்ய இருப்பவரிடம் இருக்கும் ‘பவர்’ அதிகாரத்தின் தன்மையை அலசி ஆராய்ந்து இறுதி    முடிவு எடுக்க வேண்டும்.  முக்கியமாக அவருக்கு பவர் எழுதிக்கொடுத்த சொத்தின் உரிமையாளரை நேரடியாக சந்தித்து ‘பவர்’ அதிகாரத்தை உறுதி செய்து கொள்வது நல்லது. அதில் மற்றொரு விஷயம் ஒன்றும் இருக்கிறது.

கவனமாக செயல்பட வேண்டும்
அப்படி நேரடியாக உரிமையாளரை நாடுவது பல பிரச்சினைகளை தடுக்க உதவும். சிலர் பல வருடத்துக்கு முந்தைய பவர்  அதிகாரத்தை வைத்திருக்கலாம். அது தற்போது ரத்து செய்யப்படாமல் நடைமுறையில் இருக்கிறதா? என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக ‘பவர்’ எழுதிக்கொடுத்த சொத்தின் உரிமையாளர் உயிரோடு இருந்தால்தான் அந்த பவர் அதிகாரம் செல்லும். அவர் உயிரோடு இருக்கும் வரைதான் ‘பவர்’ அதிகாரத்துக்கு மதிப்பு உண்டு. அவர் இறந்துவிட்டால் அந்த பவர் அதிகாரம் செல்லுபடியாகாது.

எனவே பவர் மூலம் சொத்து வாங்கும்போது சொத்தின் உரிமையாளர் உயிரோடு தான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அத்துடன் சொத்துக்கு பத்திரப்பதிவு செய்யும் நாள் வரை பவர் கொடுத்தவர் உயிரோடு தான் இருக்கிறார் என்பதை உறுதிபடுத்திக்கொள்வதும் அவசியம். ஏனெனில் சொத்தின் உரிமையாளர் இறந்து விட்ட பின்பு அவரிடம் பவர் அதிகாரம் பெற்றவர் சொத்தை விற்பது செல்லுபடியாகாமல் போகும் என்பதால் கவனமாக செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...